மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்: வைகோ அதிரடி அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்

2021 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து அதற்கான முன்னெடுப்புகளை செய்யத் துவங்கிவிட்டார். திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, மமக, முஸ்லீம் லீக், கொமதேக, ஐஜேகே, தவாக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.


உதய சூரியன் அல்லாத புதிய சின்னத்தில் கூட்டணி கட்சிகள் நின்றால் அது வெற்றியை பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, சின்னம் இல்லாத மற்ற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க திமுக முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரிலுள்ள தாயகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. சின்னம் தொடர்பாக வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு அவர், “எங்கள் கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்” என்று அறிவித்தார். எங்கள் முடிவு கூட்டணிக்கு பாதகமாக அமையாது என்று பதிலளித்தார்.

read more: புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலரும்: ஸ்டாலின் மடல்!


சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளதால் ரஜினி கட்சி துவங்கினாலும், இல்லையென்றால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றார். அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்ற முடிவை ரஜினி வருத்தத்தில்தான் எடுத்துள்ளார். ஆகவே, ரஜினிகாந்த் மனம் புண்படும்படியான மீம்ஸ் போடுவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார் வைகோ.

Exit mobile version