2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை பாஜக மாநிலத் தலைவர் முருகன் அறிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அறிக்கை தயாரித்து வருகிறது.
பொன்னையன் தலைமையில் அமைக்கப்பட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கை குழு, அதன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அமித் ஷா முன்னிலையில் அதிமுக அறிவித்துவிட்டது. ஆனாலும், பாஜகவின் தரப்பிலிருந்து கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அத்துடன், கூட்டணி பற்றி தேசிய தலைமை அறிவிக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். இதனிடையே ரஜினிகாந்த் கட்சி துவங்கவுள்ளதால் அவருடன் பாஜக கூட்டணியில் இணையுமா என்றெல்லாம் விவாதங்கள் எழுந்துள்ளன.
read more: முதல்வரை தேவையின்றி விமர்சிக்காதீங்க…ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அட்வைஸ்!
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 10 பேர் கொண்ட அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன். பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, அண்ணாமலை, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன், மாநில செய்தித் தொடர்பாளர் கார்வேந்தன், மாநில தலைவர் விவசாய அணி ஜி.கே.நாகராஜ், சிறுபான்மையினர் அணி மாநில துணை தலைவர் எஸ்.எஸ்.ஷா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, சிறப்பு அழைப்பாளர் நாச்சிமுத்து ஆகியோர் தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தேசியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஹெச்.ராஜாவுக்கு இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் ராஜாவுக்கு வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் அறிக்கை குழுவிலாவது இடமளித்தது அவரது ஆதரவாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது