எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.30,000 முதலமைச்சர் ஆன பின்ன ரூ.20 ஆயிரமா?


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

2020ஆம் ஆண்டு நிவர் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்சம் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாகத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மு. க ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது, வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என்று நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இந்த சூழலில் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “எதிர் கட்சித்தலைவராக முதல்வர் இருந்தபோது ஏற்பட்ட நிவர் புயலின் பாதிப்பால் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி பார்த்தால் ஒரு ஹெக்டருக்கு ரூ.71,400 வரும்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விவசாயிகளை நண்பர்களாகப் பார்த்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இப்போது எப்படிப் பார்க்கின்றார் என்று தெரியவில்லை. ஒரு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதுபோன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி 11 மாவட்டங்களில் பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அதுபோன்று, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் நிவாரண தொகையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர், “ஒரு ஹெக்டேர் நிலத்தில் பயிரிடுவதற்கான செலவுகள் ரூ.50,000 அளவில், அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.20,000/- வரையில் செலவாகிறது. அதேபோல அண்மையில் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு மற்றும் மறு நடவு செலவு ஆகியவற்றைக் கணக்கீட்டால் ஒரு ஏக்கருக்கு இதே அளவில் செலவாகும்.

இந்நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20,000/- மற்றும் அண்மையில் பயிரிட்டுச் சேதமடைந்த நிலங்களுக்கு மறுநடவிற்கு ரூ. 6,038/- மதிப்பிலான இடுபொருட்கள் என அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை ஒப்பிடும் போது எந்த வகையிலும் போதுமானதல்ல. ஆகவே, மழை மற்றும் வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பெரும் பொருளாதார இழப்பீட்டைச் சந்தித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய வகையிலான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

அதுபோன்று, டெல்டா விவசாயிகளும் ஹெக்டருக்கு 20ஆயிரம் ரூபாய் அல்லாமல் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Exit mobile version