அரசுப்பள்ளியில் பயில்பவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்இட ஒதுக்கீடு..சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேறியது.

மருத்துவ படிப்பில் தேசிய அளவிலான மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

அதைத்தொடர்ந்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில் உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக, பரிசீலித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு கடந்த மார்ச் 21-ம் தேதி அமைக்கப்பட்டது.

அந்தக்குழு அளித்த அறிக்கையில், அரசுப்பள்ளியில் 10% உள்இட ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. அரசு அதனைப் பரிசீலித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது.

அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவையில் கூட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்களுக்க்கான உள்இட ஒதுக்கீடு சட்டமசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். தொடர்ந்து, அந்த மசோதா வெற்றிகாரமாக நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version