ஆளுநருக்கு அழுத்தம்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு மீண்டும் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆன போதிலும் இதுவரை ஆளுநர் முடிவெடுக்கவில்லை.


இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக 3 அல்லது 4 நாட்களில் மாநில ஆளுநரே முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டிய கண்டிப்பும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாள்களில் நல்லது நடக்கும் என நம்புவோம். புதிய வாரம் புதிய நம்பிக்கை அளிக்கும் என்று தெரிவித்தார்.

read more: முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக தீர்மானம்!


பேரறிவாளன் விடுதலை குறித்து அடுத்த 4 நாள்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் தமிழக அரசு மீண்டும் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தினார்.


மேலும் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும் என்ற ராமதாஸ், இவை அனைத்தும் நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version