தமிழகத்தில் மோடி விவசாய நண்பன் என்ற புதிய இயக்கம் தொடங்கப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
மோடி விவசாய நண்பன் தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் மோடி விவசாய நண்பன் என்ற இயக்கம் விரைவில் தொடங்கப்படும். இந்த இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி செய்த நன்மைகளை கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளுக்கு விளக்குவோம். புதிய விவசாய சீர்த்திருத்தச் சட்டங்கள் அவசியமானது என பலர் தெரிவித்துள்ளனர். புதிய சட்டத்தால் விலை பொருட்களே விவசாயிகளே நிர்ணயம் செய்து விற்பனை செய்ய முடியும். விவசாயிகள் நினைத்தால் விளை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
இரட்டை வேடம்
விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் சட்டங்களை விவசாயிகளுக்கு எதிரானதென காங்கிரஸ், தி.மு.க. பிரச்சாரம் செய்கிறது. 2016 தேர்தலின் போது விவசாயிகளுக்கு நன்மை தரும் சட்டங்களை நிறைவேற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழக விவசாயிகள் விவசாய சட்டத்தை ஆதரிக்கின்றனர். தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு இல்லை. எதிர்கட்சிகள் பயத்தை ஏற்படுத்தி கடைகளை மூட வைத்துள்ளனர். தமிழகத்தில் வேல் யாத்திரை நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.