நிறுத்திக்கொள்ளுங்கள்: 2ஜி வழக்கில் முதல்வருக்கு ஆ.ராசா எச்சரிக்கை!

2ஜி வழக்கு தொடர்பான விமர்சனத்தை முதல்வர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஆ.ராசா எச்சரித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் தொகையைப் போல 2 ஜியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முதல்வருடன் கோட்டையில் நேரடியாக விவாதிக்க தயார் என அறிவித்தார்.அத்துடன் கோடி கோடியாக கொள்ளையடித்து அரசியலமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி ஜெயலலிதா என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர், 2ஜி வழக்கில் சிபிஐ உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால்தான் ராசா தப்பியுள்ளார் என்று குற்றம்சாட்டினார். இதனிடையே கொள்ளைகாரி என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்று ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி பேட்டியளித்தார். இறந்த பிறகு ஜெயலலிதாவை ஏன் விமர்சிக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.


இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, 2 ஜி வழக்கையும், சொத்துக் குவிப்பு வழக்கையும் ஒப்பிட்டுப் பேசினார். 2ஜி வழக்கின் தீர்ப்பு நகல்களை வெளியிட்ட அவர், 2 ஜி வழக்கின் தீர்ப்பில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்களையும் சிபிஐ நிரூபிக்கவில்லை, அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2ஜி வழக்கு வதந்தி, கிசுகிசு யூகம்தான் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது என சுட்டிக்காட்டினார்.


ஆனால், முதல்வர் தனது தகுதியை மீறி விமர்சித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்கவும், விவாதத்திற்கும் தயாராக இருக்கிறேன். எனது அழைப்புக்கு அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறிய ராசா, ஆனால், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில், மக்களாட்சி தத்துவத்தின் அடித்தளமான அரசமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலை என குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். சசிகலா உள்ளிட்டோர் அரசு பதவியில் இல்லாததால் இது ஜெயலலிதாவையே குறிக்கும் என்றார்.


ஜெயலலிதாவை தவிர்த்து விட்டு சசிகலா, இளவரசி சுதாகரன் மட்டுமே குற்றவாளி என்று சொல்லமுடியாது எனவும், இறந்து போனாலும் முதல் குற்றவாளியாக ஜெயலலிதாவை தான் நீதிமன்றம் கூறுவதாகவும் தெரிவித்தார் ஆ.ராசா. அத்துடன், சொத்துக் குவிப்பு விவரத்தை மறைத்து அதிமுகவினர் பேசிவருகிறார்கள் என்றதோடு, முதல்வர் இத்துடன் 2 ஜி தொடர்பான தனது விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Exit mobile version