ரத்த அழுத்தப் பிரச்சினை: மருத்துவமனையில் ரஜினிகாந்த்

ரத்த அழுத்தப் பிரச்சினை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்தே திரைப்பட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. விரைவில் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதால் வெகு வேகமாக படப்பிடிப்பு நடந்துவந்தது. சமீபத்தில் அண்ணாத்தே குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக படபிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. என்றாலும் கூட அவர் ஐதராபாத்தில் தன்னை தனிமைபடுத்திக்கொண்டார்.


இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று காலை திடீரென ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி மருத்துவமனையின் அறிக்கை வெளியான பிறகே அனைவருக்கும் தெரியவந்தது.


மருத்துவமனை நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில், ரஜினிகாந்த் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 22ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர் எனத் தெரிவித்தது.


ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதுவுமில்லை எனவும், ரத்த அழுத்தத்தில் கடுமையான ஏற்ற இறக்கம் இருந்ததன் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்ட அப்பல்லோ, “இரத்த அழுத்தப் பிரச்சினை தீரும் வரை மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு, அதன்பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர அவருக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளது.

read more: பாஜகவில் இணைந்த கமல் கட்சி பொதுச் செயலாளர்!


ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி டிசம்பர் 31ஆம் தேதி கட்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version