நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அவர் கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்வி சமீப வாரங்களாக எதிரொலித்தது ஏனெனில் தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதை உறுதிப்படுத்திய ரஜினிகாந்த், கொரோனா காலத்தில் மருத்துவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியதையும் வெளிப்படுத்தினார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்தது.
இதனிடையே சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ஆம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தான் என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவாக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தாகவும், தன்னுடைய முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன், “வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்..அதிசயம் நிகழும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்ற வதந்திகளுக்கும் முற்றுப் புள்ளிவைத்துள்ளார்.