நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் போராட்டம் நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டதன் காரணமாக உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரமாட்டேன், கட்சி தொடங்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். ஆனாலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி நேற்று போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். வா தலைவா வா.. இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை.. உங்கள் ஆட்சி வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை ரஜினி ரசிகர்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “ நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி, பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்” என்பதை சுட்டிக்காட்டினார்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது என்று தெரிவித்த ரஜினிகாந்த், தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.
read more: திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டி? ஈஸ்வரன்
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.