அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை கோரிய சூரியமூர்த்தி என்பவரின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா சிறை சென்ற பிறகு அவரையும் அவரை சார்ந்தவர்களையும் அதிமுகவிலிருந்து அமைச்சர்கள் ஒன்றுகூடி ஒதுக்கிவைத்தனர். பின்னர் பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு அர்பணிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


இதனை எதிர்த்து திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டி சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் மனுதாக்கல் செய்தார். அதில், உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கட்சியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


இந்த வழக்கு விசாரணையின் போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2013 ம் ஆண்டு வரை கட்சியின் உறுப்பினராக இருந்த அவர் அதன் பின்னர் உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்கவில்லை எனவும், தற்போது உள்கட்சி விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர அவருக்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் இல்லை எனவும் வாதிட்டார்.

read more: குருமூர்த்திக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!


இரு தரப்பு வாதங்களும் முடிந்து, வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் பிறப்பித்த உத்தரவில், வழக்கு தொடர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேவைப்பட்டால் மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version