அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று வரும் 7-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிவிப்பார்கள் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்:
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்காமல் இருந்தன. ஆனால், கடந்த இரு மாதங்களாக ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
முதல்வர் வேட்பாளர்:
இந்த நிலையில், அ.தி.மு.க.வில் கடந்த இரு மாதங்களாகவே முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நிலவி வருகிறது. அமைச்சர்கள் தெரிவித்த மாறுபட்ட கருத்து காரணமாக, இந்த சர்ச்சை அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,முதல்வர் வேட்பாளர் தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
காரசார விவாதம்:
இந்த பரபரப்பான சூழலில், அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தீவிரமாக நடைபெற்றது.. மேலும், தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை, சசிகலா விவகாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முதல்வர் வேட்பாளர் யார் என்று முடிவெடுப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுமே முடிவெடுக்க செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, செயற்குழு முடிவு குறித்து அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
அக்.7 ம் தேதி அறிவிப்பு :
இன்று காலை 10 மணி அளவில் செயற்குழு கூடியது. செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. தலைமையில் இயங்கக்கூடிய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் வரும் அக்.7- ம் தேதி அன்று இணைந்து பேசி அறிவிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.