அரசியல் கட்சி தலைவர்களை அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், யூ-டியூப்பருமான சாட்டை துரைமுருகன் 2வது முறையாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரான மயூரா ஜெயக்குமார் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நான் கோவை மாநகரில் வசித்து வருகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராக உள்ளேன். எனக்கு 09/10/2021 அன்று கோவையில் கிடைக்கப்பெற்ற புலனம் செய்தியின்படி (what’s app message) நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த பாரத நாட்டின் முன்னாள் பிரதமராகவும், மிக உயரிய ‘பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட அமரர் ராஜீவ் காந்தி அவர்களையும், காங்கிரஸ் கட்சியின், தலைவராகவும், கோடிக்கணக்கான மக்களின் அன்பைப்பெற்ற அன்னை திருமதி. சோனியா காந்தி அவர்களையும் இழிவாகவும், தரக்குறைவாகவும், மனம் புண்படும் வகையிலும், இந்திய கலாச்சாரத்துக்கு எதிராகவும், பெண் தலைவரை இழிவுபடுத்தி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதுடன் ஒரு சிலரை வன்முறை செய் என்று கலவரம் தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.