பதவிக்காக ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே முற்றும் மோதல்..அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து?..

வரும் 6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்ச்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே, இபிஎஸ், ஓபிஎஸ் இல்லங்களிலும் மாறி மாறி அவர்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன

6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது, வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எம்.பி. தம்பிதுரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியுள்ளார். இதேபோல, அமைச்சர்கள் சி.வி சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு, சி.வி.சண்முகம் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று, எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம், வரும் 6 ஆம் தேதி, நடைபெற உள்ளதாக அதிமுக கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னர், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் அந்த பதிவு நீக்கப்பட்டு உள்ளது.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே நிலவும் பனிப்போரால், ஆலோசனை கூட்டம் தொடர்பாக கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததன் காரணமாகவே அந்த பதிவு நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version