வி.கே சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே பேசியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் திடீரென சமாதானம் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகளுக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் கடந்த மாதம் திருவண்ணாமலையில் வி.கே சசிகலா தலைமையில் திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று தஞ்சை அருகே பூண்டி புஷ்பம் கல்லூரியில் இவர்களின் திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது. இதில் வி.கே.சசிகலா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக தஞ்சையில் உள்ள தனியார் விடுதியில் மருது சகோதரர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த டிடிவி.தினகரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “மருது சகோதரர்கள் வீரத்திற்கும், விசுவாசத்திற்கும் பெயர் போனவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் எங்கள் அணியில் உள்ளார்கள். எனவே இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம். அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு. ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக தற்போது ஓபிஎஸ் சரியான கருத்தையே பேசி வருகிறார்” எனத் தெரிவித்தார்.