மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக எழுத்தாளர் அருந்ததிராயின் Walking With The Comrade என்ற புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா கட்சி சார்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏ.பி.வி.பி) நிர்ப்பந்தத்தின் காரணமாகவே சர்வதேச புக்கர் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தமிழக உயர் கல்வித்துறை, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள நிலையில் ஒரு மாணவ அமைப்பின் எதிர்ப்புக்கு அடிபணிந்து புத்தகத்தை நீக்கியிருப்பது அதிமுக அரசின் இயலாமையைக் காட்டுகிறது.
கல்வித்துறையை காவித்துறையாக்கும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். வியூகத்தின்படி தொடர்ந்து செயல்பட்டுவரும் பா.ஜ.க. மற்றும் அதன் மாணவர் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் அடாவடிப் போக்கிற்கு அடிபணியாமல் அருந்ததிராயின் புத்தகம் மீண்டும் அதே பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.