சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்தத் தொகுதியில் நாளை துவங்குகிறார்.
அதிமுக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு குழு அமைத்து, மண்டல ரீதியாக பொறுப்பாளர்களை நியமித்தும் கடந்த மாதமே தேர்தலுக்கு தயாராகிவிட்டனர். கடந்த 14ஆம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே கொரோனா காலம் என்பதால் காணொலி வாயிலாக இரண்டு கட்ட பிரச்சாரத்தை ஸ்டாலின் முடித்துவிட்டார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக முக்கிய நிர்வாகிகள் மக்களை சந்தித்துவருகின்றனர். இதேபோல சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் கமல்ஹாசனும் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். மற்ற கட்சி தலைவர்களும் தேர்தலை நோக்கமாகக் கொண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
read more: எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வாரிசு இவர்கள்தான்: முதல்வர் விளக்கம்!
இதனிடையே திறந்தவெளி கூட்டங்களுக்கு 50 சதவிகித இருக்கைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்ததால், பிரச்சாரத்திற்கு இருந்த தடை நீங்கியது. இந்த நிலையில் சேலத்தில் இன்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது, பெரியசோலை கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என கட்சி உடன்பிறப்புகள் வலியுறுத்தினர் என்றவர், “என்னால் அடிக்கடி சேலம் வந்துசெல்ல முடியாது. தேர்தலுக்கான நேரமும் குறைவாக இருப்பதால் கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க எனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இருந்து துவங்க இருக்கிறேன்” என்று கூறினார். இதனால் தற்போதே தேர்தல் களம் களை கட்டத் துவங்கிவிட்டது.