திராவிட கட்சிகளின் கடைசி காலம்: ரஜினி வெற்றிபெற யாகம் நடத்திய சகோதரர்!

ரஜினிகாந்த் கட்சி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அவரது சகோதரர் சத்தியநாராயணன் யாகம் நடத்தியுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதே தேதியில் கட்சி அறிவிப்பது குறித்த விவரங்களை வெளியிடுகிறார். ஜனவரியில் கட்சியை துவங்குவதாக ரஜினி தெரிவித்துள்ளதால் அதற்கான பணிகளும் வேகமெடுத்துள்ளது. இதற்கு இடையில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகிறார் ரஜினி.


ரஜினிகாந்த் கட்டாயம் அரசியல் வருவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தொடர்ந்து கூறி வந்தார். அவருக்காக பல்வேறு கோயில்களில் யாகங்களும், வழிபாடுகளும் மேற்கொண்டு வந்தார்.


இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை சென்ற சத்தியநாராயணன், தனது தம்பி ரஜினி கட்சி ஆரம்பிக்கவுள்ளதையடுத்தும், பிறந்தநாளை முன்னிட்டும் சிறப்பு யாகம் நடத்தினார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்ற அருணகிரி நாதர் கோவிலில் ஆயுஷ் யாகம் மற்றும் அபிஷேகம் நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி சகோதரர், அரசியல் கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படும் என்று கூறினார். “ரஜினியின் புதிய கட்சியில் இணைய சில அரசியல் பிரமுகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடக் கட்சிகளின் கடைசி காலம் இது” என்றும் சத்திய நாராயணா தெரிவித்துள்ளார்.

Exit mobile version