ரஜினிகாந்தின் ஆதரவு பாஜகவுக்குத்தான்: அடித்துச் சொல்லும் எல்.முருகன்

நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு நிச்சயம் பாஜகவுக்குத்தான் கிடைக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிவித்துவிட்டார். இருந்தபோதிலும் அவரை அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போராட்டம் நடைபெற்றது.


இதனால் அதிருப்தியடைந்த ரஜினிகாந்த், தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிப்பதாகவும், நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.


அரசியலுக்கு வராத நிலையில் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ரஜினி ஆதரவு யாருக்கும் இருக்காது என அவரது கட்சியின் மேற்பார்வையாளராக இருந்த தமிழருவி மணியன் தெரிவித்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “ரஜினி தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறவர், ஆன்மீகத்தை எடுத்து செல்பவர் நிச்சயம் அவரின் ஆதரவு பாஜகவிற்கு கிடைக்கும்” என நம்பிக்கைத் தெரிவித்தார்.

read more: அரசியலுக்கு வரமாட்டேன், வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!


தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முதல்வரின் ஆட்சி நடைபெறுகிறது என்று குறிப்பிட்ட முருகன், “வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடரும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவில் இடம் இருக்கிறதா என்பதே தெரிய வில்லை, அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா, கனிமொழியா, உதயநிதியா என்பது தெரியவில்லை” எனவும் விமர்சித்தார்.

Exit mobile version