போராட்டத்தால் பொதுச் சொத்துக்கு சேதம்: வன்னியர் சங்கத்திற்கு தடை கேட்டு வழக்கு!

வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வராகி என்பவர் முறையீடு செய்துள்ளார்.

வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி சென்னை தாமஸ் மன்றோ சிலை அருகே அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொள்ள வந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பாமகவினரை பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


இதனை கண்டித்து அவர்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 10 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், யாரோ சிலர் செய்ததை வன்னியர்கள் செய்ததாக கூற வேண்டாம். வன்னியர் சமுதாயத்தை வன்முறை சமுதாயம் என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தினார்.


இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் வராகி என்பவர் முறையீடு செய்தார். அதில், “20 சதவிகித இட ஒதுக்கீட்டு கேட்டு பாமக நடத்திய போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதால் பொது சொத்துக்கள் சேதமடைந்தன” என்று குறிப்பிட்டு, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ராமதாஸ், அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்தார்.


இதனை அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்தவும் வேண்டுகோள் விடுத்தார்.. ஆனால் வராகியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் சத்திய நாராயணா, ஹேமலதா அமர்வு மனுவாக தாக்கல் செய்தால் எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை நீதிமன்ற பதிவுத் துறை முடிவெடுக்கும் என தெரிவித்தனர். வழக்காக தாக்கல் செய்யும் பணிகளில் வராகி வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Exit mobile version