தேசத்துரோக செயலுக்காக மெகபூபா முப்தியை சிறையில் அடைக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்…

மெகபூபா முப்தியின் தேசத்துரோகக் கருத்துக்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா கவனத்தில் கொள்ள வேண்டும் என பாஜக கூறி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, 14 மாதங்களுக்கு பிறகு கடந்த 13ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்கள் நேற்று சந்தித்தார். அவர் அப்போது கூறிய வார்ஹடைகளுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா இவரின் பேச்சை கண்டித்து கூறியது யாதெனில், மெகபூபா முப்தியின் தேசத்துரோகக் கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளும்படி துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை கேட்டுக்கொள்கிறேன். தேசத்துரோக செயலுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும்.

நமது தேசியக்கொடி மற்றும் தாய்நாட்டிற்காக எங்கள் ரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் தியாகம் செய்வோம். ஜம்மு-காஷ்மீர் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே ஒரே ஒரு கொடியை மட்டுமே ஏற்ற முடியும். அதுதான் தேசியக் கொடி.

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதற்காக மத்திய அரசு எடுத்த முடிவை மாற்றியமைக்க முடியாது. காஷ்மீர் மக்களைத் தூண்ட வேண்டாம் என்று மெகபூபா முப்தி போன்ற தலைவர்களை நான் எச்சரிக்கிறேன். அமைதி, இயல்புநிலை மற்றும் சகோதரத்துவத்திற்கு இடையூறு செய்வதற்கு நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம். ஏதேனும் தவறு நடந்தால், அதன் விளைவுகளை அவர் (மெகபூபா) எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version