முதல்வரின் பொங்கல் பரிசை எதிர்த்தேனா? குற்றம்சாட்டும் அண்ணாமலை

முதல்வரின் பொங்கல் பரிசை எதிர்த்ததாக தவறான தகவல் பரப்பப்படுவதாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

கோயம்புத்தூரில் நேற்று வேளாண் சட்டங்கள் விளக்க நிகழ்வில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து தேர்தல் நேரத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல். ஆகவே, 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்பதற்காக 5 வருடங்களுக்கு வாழ்க்கையை அடமானம் வைத்துவிட வேண்டாம் என்றார்.


முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்த கருத்து அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பொங்கல் பரிசாக அதிமுக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாயை இவ்வாறு விமர்சித்துள்ளார் அண்ணாமலை என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு கண்டனம் தெரிவித்த அதிமுக மூத்த தலைவர் செம்மலை, அவரை பாஜக தலைமை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

read more: எங்களது ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம்: கமல்ஹாசன் அறிவிப்பு!


இந்த நிலையில் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த அண்ணாமலை, “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக, தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


தேர்தல் நேரத்தில் , 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது, அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதை தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்றவர், நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும் பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version