வேல் யாத்திரையால் கொரோனா பரவல்: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு புகார்!

அனுமதியை மீறி நடைபெற்ற வேல் யாத்திரை கொரோனா பரப்ப காரணமாக இருந்ததென டிஜிபி தரப்பு புகார் தெரிவித்துள்ளது.

சிஏஏ உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. தமிழக அரசு அதனை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பிப்ரவரி மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட இருந்தனர். இதற்கு எதிராக இந்திய மக்கள் மன்றத்தைச் சேர்ந்த வராகி வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்து கொரோனா பரவல் ஆரம்ப நிலையில் இருந்த அப்போது, ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு கொரோனா குறையும் வரை காவல் துறை அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சமீப காலமாக அரசியல் கட்சிகள் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதனால் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களுக்கு அனுமதி அளித்ததாகக் கூறி காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வராகி தொடர்ந்தார்.


இந்த வழக்கில் தற்போது பதில் மனு தாக்கல் செய்த டிஜிபி தரப்பு, பாஜகவின் வேல் யாத்திரை மீது புகார் கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவிற்குப் பின், தமிழகத்தில் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையை நடத்தினார்.அனுமதி பெறாமல் பாஜக வேல் யாத்திரை நடத்தி பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரப்ப காரணமாக இருந்தது என குற்றம்சாட்டப்பட்டது.

பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதது, காவல்துறையினரிடம் தவறாக நடந்து கொண்டது, சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தது போன்ற குற்றங்களுக்கான இதுவரை 135 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 1,241 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version