என்ன நல்லது செய்தார் ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

கிராம சபைக் கூட்டங்கள் மூலம் ஸ்டாலின் என்ன நல்லது செய்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் திமுக கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர்களின் தொகுதிகளை குறிவைத்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதிமுக அரசை அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறி விமர்சித்து வருகிறார்.


மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் இதுபோன்று அப்போது திமுகவால் நடத்தப்பட்ட ஊராட்சி சபைக் கூட்டங்கள்தான் என அதிமுக கருதியது. இதனால், கிராம சபை பெயரில் கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும், எத்தனை தடை வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என அறிவித்த திமுக, மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறது.


தற்போது மக்கள் கிராம சபைக் கூட்டங்களை கடுமையாக விமர்சித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு மாவட்டம் பவானியில் பிரச்சாரம் செய்த முதல்வர், மக்கள் சபை என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வரும் ஸ்டாலின் அதனால் எந்த மக்களுக்கு நன்மை செய்தார் எனக் கேள்வி எழுப்பினார்.

read more: பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் அதிமுக பிரமுகர் கைது: உடனே கட்சியிலிருந்து நீக்கம்!


நாடாளுமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இதே போல மக்கள் சபைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, மக்கள் பிரச்சினைகள் எதையாவது தீர்த்து வைத்தார்களா? அல்லது மக்கள் அளித்த மனுவையாவது என்னிடம் வந்து கொடுத்தார்களா என எடப்பாடி பழனிசாமி கேட்டார். கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version