சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற மின்சாரப் பேருந்துகள் இயக்க நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சிவசங்கர். சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேருந்துகள் இயக்கத்தினை தொடங்கி வைத்த முதலமைச்சர், அங்கிருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேருந்து கேட்டறிந்தார். மேலும் பேருந்தில் ஏறி அதன் சிறம்பம்சங்களைப் பார்வையிட்டார்.
தாழ்தள மின்சார பேருந்தின் சிறப்பு அம்சங்கள்
12 மீட்டர் நீளம் கொண்ட பேருந்தின் தரை உயரத்தை 400 மில்லி மீட்டரில் இருந்து 250 மில்லி மீட்டராக குறைக்கும் (kneeling) தொழில்நுட்பம் உள்ளது.
ஒரு பேருந்தில் சீட் பெல்ட் வசதியுடன் 39 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது.
முதியோர் / மாற்றுத்திறனாளி பயணிகளுக்கென தனி இருக்கைகள், மாற்றுத்திறனாளிகள் முதியோர் அமரும் இடம்.
சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு சாய்வுப் பலகை நிறுத்துவதற்காக தனியிடம், பிரத்தியேக லாக் மற்றும் சீட் பெல்ட் வசதி.
ஒவ்வொரு இருக்கையின் கீழ் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி.
ஒரு பேருந்தில் நான்கு சிசிடிவி கேமராக்கள், ஒரு பின்புற கேமரா மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட இரண்டு பிரத்தியேக கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
13 இடங்களில் அவசர கால பொத்தான்கள் மற்றும் அவசர நிறுத்த கோரிக்கை பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு ஒலி அறிவிப்பும், பேருந்து உட்புறத்தில் LED டிஸ்ப்ளே போர்டு மூலம் அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் இன்-சர்ட் செய்து ஷூ அணிந்து டிப்டாப்பாக காணப்பட்டனர். இந்த மின்சாரப் பேருந்துகள் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைத்து காற்றின் தரத்தை அதிகரித்து சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
