எதிர்க்கட்சியா இருந்தப்ப ஒரு நியாயம் இப்போ ஒரு நியாயமா? போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள்!!

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை அளித்துள்ள பேட்டியில், முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தினசரி கொரோனா தொற்று, 36,000 என இருந்தது.

அந்த அசாதாரண சூழலில் இருந்து 1,500 என்ற அளவில் தினசரி பாதிப்பை குறைத்துள்ளோம். கொரோனா தடுப்பு பணி, தடுப்பூசி பணி என அனைத்திலும் அர்ப்பணிப்போடு மருத்துவ துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதனால் தான், சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

ஆனாலும், மருத்துவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. இதற்காக 2019ல் நடந்த போராட்டத்திற்கு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஆதரவு தெரிவித்ததுடன், தம் ஆட்சி அமைந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தார். அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த, ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு கூடுதலாக தேவை.

அதிலும், பெரும் பகுதி காப்பீட்டின் வாயிலாக, அரசுக்கு வருவாயாக கிடைத்து விடும். கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனால், வேறு வழியின்றி போராட்டம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

முதலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக, வரும் 20ம் தேதி காலை 10 மணி முதல் மதுரையில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் அடுத்த மாதம் 10ம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version