முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? பதில் சொல்லாத மத்திய அமைச்சர்

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்துவிட்டாலும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை தேசிய தலைமை அறிவிக்கும் என கருத்து தெரித்தார் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அவரின் இந்த கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.


எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம் என அதிமுக திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தலைமை விரைவில் அறிவிக்கும் என்று மீண்டும் முருகன் கூறினார்.


இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜக மூத்த தலைவர்கள், மத்தியில் அமைச்சர்கள் தொடர்ந்து தமிழகம் வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திச் செல்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னை வந்த பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார்.


அதன்பிறகு கிண்டியில் நடந்த விழாவில் கலந்துகொண்ட ஜவடேகர், புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெறும் என்றார்.

read more: சூர்யா அளவுக்காவது விஜய் குரல்கொடுக்க வேண்டும்: சீமான்


தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. தொடர்ச்சியாக செய்தியாளர்கள் இதே கேள்வியை எழுப்பியபோதும், அமைதியாக இருந்தார். பின்னர், பாஜகவுக்கு என்று ஒருசில வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளைப் பின்பற்றி தேசிய தலைமைதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.

Exit mobile version