தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை மீட்போம், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை சீரமைப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நாமக்கல்லில் பிரச்சாரம் தொடங்குகிறார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை சென்றார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் மீதான திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் விமர்சனத்திற்கு பதில் சொன்னார். வாக்காளர்களுக்கு அளிக்க வைத்திருந்த பணம் பிடிபட்டதால் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட வேலூர் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இதனை மறந்துவிட்டது அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் என்றார்.
நான் என்னுடைய சொத்து விவரங்களை அளித்துள்ளேன் எனவும், அதேபோல துரைமுருகன் அவருடைய சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா என்றும் கேள்வி எழுப்பிய முதல்வர், “துரைமுருகனுக்கு படிக்க உதவி செய்ததே எம்.ஜி.ஆர்தான். அன்று அப்படி இருந்தவர் இன்று எப்படி இருக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி விட்டுச் சென்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில்தான் நிறைவுற்றன” என்று விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் கூறிய அவர், தமிழகத்தைப் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும். சினிமாவில் வேண்டுமானால் அவர் பெரிய ஆளாக இருக்கலாம். அரசியலைப் பொறுத்தவரை அவர் ஒரு ஜீரோ என விமர்சனம் செய்தார்.