இன்று நான், ஓபிஎஸ். நாளை நீங்களும் முதல்வர்: தொண்டர்கள் மத்தியில் இபிஎஸ்!

தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஒரே கட்சி அதிமுகதான் என பிரச்சார பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுகவின் பிரச்சாரப் பொதுக் கூட்ட துவக்க நிகழ்வு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று நடைபெற்றது.அப்போது உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் 11 வருடங்கள், ஜெயலலிதா 15 வருடங்கள், நான் மூன்றரை வருடங்கள் என தமிழகத்தில் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுகதான் என்றார்.


இந்தியாவிலேயே அதிகமான விருதுகளைப் பெற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என்ற அவர், உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்தது தமிழகம் மட்டும் தான் எனவும் கூறினார்.

read more: மத்திய அரசை ஆதரிப்பது ஏன்? ஓபிஎஸ் விளக்கம்!


சில புல்லுருவிகள் அதிமுகவை வீழ்த்த நினைத்தன. அது தவிடுபொடியாகிவிட்டது. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “வீட்டு மக்களுக்காக உழைத்தவர்கள்தான் அதிமுகவை விமர்சனம் செய்கிறார்கள். நாட்டு மக்களுக்காக உழைத்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு” என்று தொண்டர்களுக்குக் கூறினார்.

மேலும், “அதிமுகவை ஒன்றிணைத்த சாதனை ஜெயலலிதாவையே சாரும். தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அதிமுகதான். இன்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கலாம். நாளை தொண்டர்களாகிய நீங்களும் முதல்வராக வரலாம் ” என்று பேசினார்.

Exit mobile version