ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்குவதை தடுத்து நிறுத்த திமுக முயல்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப் பயணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று துவங்கினார். அவருக்கு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராசிபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நோக்கத்தில் ரூ. 2,500 வழங்கப்படுவதாக விளக்கம் அளித்தார். ஆனால், அதிமுகவினர் வீடு வீடாக சென்று பரிசு டோக்கன் வழங்குகிறார்கள் என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார் எனக் குற்றம்சாட்டினார்.
அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என திமுக சூழ்ச்சி செய்வதாகவும், கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கியபோது நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்ததை சுட்டிக்காட்டியும் பேசிய முதல்வர், மக்களுக்கு நல்லது செய்வது எதுவுமே திமுகவுக்கு பிடிக்காது என விமர்சித்தார்.
read more: கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது: பாஜகவுக்கு முதல்வர் பதில்!
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி புரிவதாகவும், நாமக்கல் மாவட்ட மக்களின் அன்பை அதிமுக அரசு பெற்றுள்ளதாகவும் கூறினார். ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட கடைக்கோடி மக்களுக்கு நன்மை செய்யும் ஒரே அரசு அதிமுக அரசு என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.