திமுக எம்பி – அமைச்சர் பிடிஆருக்கு இடையே மோதல் : கடும் கோபத்தில் ஸ்டாலின்..!!

ஜிஎஸ்டி கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ள சம்பவம் அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சிகளுக்கு காட்டமாக பதிலளித்து சர்ச்சைக்குரிய நபராக வலம் வருபவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இவர் நிதியமைச்சராக இருந்த போதிலும், வேளாண், இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட வேறு துறைகளை பற்றி எதிர்கட்சிகள் விமர்சித்தாலும் அவர்களுக்கு நக்கலாக பதிலளித்து வருபவர். மீம்கள் மூலமாகவும் சில சமயங்களில் பதிலடி கொடுப்பார்.

அந்த வகையில், அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காமல் புறக்கணித்தார். கொளுந்தியாவின் வளைகாப்பில் பங்கேற்பதற்காகவே, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கூட்டத்தை புறக்கணித்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தனக்கு கொளுந்தியாள் இல்லை எனவும், இல்லாத கொளுந்தியாவின் வளைகாப்புக்கு செல்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று பொய் சொல்கிற முட்டாள்களே என்று அவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து பேசினார். அவர் பேசியதாவது :- எதிர்கட்சிகள் என்றால் விமர்சனம் வைப்பது சகஜமான ஒன்றுதான். அதனை எப்போதும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். ஆனால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எளிதில் எரிச்சல் அடைகிறார். அவர் பேசுவதில் பெரும்பாலான பேச்சுக்கள் அவர் ஆத்திரமடைவதன் வெளிப்பாடாகவே உள்ளது. அவர் யாரையும் வம்புக்கு இழுப்பதில்லை. ஆனால், மற்றவர்கள் ஏதேனும் பேசினால் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார்.

அவர் தன்னை ஓர் அரசியல்வாதியாக பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் நாம், செயல்களில் ஈடுபட வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்ப்பார்கள். சண்டைபோட வேண்டுமென விரும்பமாட்டார்கள். இதைத்தான் நான் எப்போதும் அவருக்கு அறிவுறையாக சொல்வேன். முதலமைச்சர் ஸ்டாலினும் அவருக்கு அறிவுரை வழங்குவார். எங்களுடைய கட்சி தலைமை, பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்களை கூர்ந்து கவனித்து வருகிறது. இனி மேல் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அவர் மீண்டும் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று எனக்கு தெரியவில்லை, எனவும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், தன்னைப் பற்றி இப்படி பொதுவெளியில் டிகேஎஸ் இளங்கோவன் பேசியதால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கோபமும், அதிருப்தியும் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில், யார் பெயரையும் குறிப்பிடாமல் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, ஒரு பதிவை போட்டிருந்தார்.

அதாவது, அதாவது, “முட்டாள் கிழவன், 2 கிலோ மீன் வாங்குவதற்கு கூட தகுதியில்லாத நபர் என்பதை சிலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். அது சரியாகத்தான் இருக்கிறது,’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு, என்ன நினைத்தாரோ அவர், மீண்டும் அந்த பதிவை டெலீட் செய்துள்ளார். ஆனால், அந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version