கொரோனா தடுப்பூசி செலுத்த அவசரப்படுவது ஏன்? மார்க்சிஸ்ட் கேள்வி!

மூன்றாவது கட்ட பரிசோதனைகளை முடிக்காமல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அவசரப்படுவது ஏன் என சிபிஎம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 5.36 லட்சமும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி வந்துள்ளன. ஆனால் முறையான சோதனைகள் முடியாமல் தடுப்பூசி செலுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இதுவரை இரண்டு கட்ட பரிசோதனை தரவுகளே வெளிவந்துள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகள் முழுமையாக வெளிவராத நிலையில், அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல என குற்றம்சாட்டியுள்ளார்.


கொரோனா நோய்த் தொற்று சற்று குறைந்துள்ள சூழ்நிலையில் முழுமையான பரிசோதனை தரவுகள் வெளிவந்த பிறகு தடுப்பூசி செலுத்துவதே மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் என சுட்டிக்காட்டிய அவர், தடுப்பூசி தயாரித்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் மக்கள் அச்சத்தை அகற்றும் வகையில் மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகளையும், அதன் செயல்திறனையும் முழுமையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

read more: சசிகலாவை அதிமுக சேர்த்துக்கொள்ள வேண்டும்: காரணம் சொல்லும் குருமூர்த்தி


மேலும், “கொரோனா தடுப்பூசிகளின் செயலாற்றலையும், பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்து அனைத்து மக்களுக்கும் இலவசமாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்” என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version