மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்திற்கு திமுக தோழமைக் கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி புறநகரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 11ஆவது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.
நான்கு முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்தது. எனினும், சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறாமல் தங்களது போராட்டத்தைக் கைவிடுவதில்லை என விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர். அடுத்தகட்டமாக நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன விவசாய சங்கங்கள். இதற்கு பல மாநிலங்களில் இருந்தும் ஆதரவு குவிந்துள்ளது.
இந்த நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டாலின் உள்பட அக்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், கடும் குளிரிலும், ஆறு மாதத்திற்குக் கூட உணவுகளைத் தயார் செய்து கொண்டும் தங்களின் வாழ்வுக்குத் துணை நிற்கும் உபகரணமான டிராக்டர்களுடன் தினமும் விவசாயிகள் மனத் திடத்துடன் டெல்லியில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனாலும் மத்திய பாஜக அரசு கோரிக்கைகளுக்கு, பேச்சுவார்த்தை என்று இழுத்தடிக்கிறதே தவிர அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு தழுவிய முழு அடைப்பிற்கு மனமார்ந்த ஆதரவு அளிப்பதாக தெரிவித்த தலைவர்கள்,விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழகத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல் அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்கும் குரலாக இருக்கட்டும் என கூட்டறிக்கையில் குறிப்பிட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள்,மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, பாரத் பந்த்தை வெற்றி பெறச் செய்யவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.