நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தை வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சியாக மாற்ற இருக்கிறார். அரசியல் கட்சியின் கொடி, சின்னம் கொள்கைகளை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதால் இந்தத் தாமதம் எனக் கூறப்படுகிறது. ஆரம்பிக்கப்போகும் கட்சியின் மேற்பார்வையாளராக அவரை தொடர்ந்து அரசியலுக்கு அழைத்து வந்த தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன்மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரஜினியின் அரசியல் வரவு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ரஜினியின் பேட்டியை முழுமையாக அறியாமல் அது பற்றி பேச விரும்பவில்லை எனக் கூறினார். எனினும் ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், “சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். ரஜினியின் வரவு நல்வரவாகட்டும்” என்று கூறினார். ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, எதிர்வரும் காலங்களில் அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்று கூறினார் துணை முதல்வர். ரஜினி கட்சியுடன் கூட்டணி வைப்பதில் தங்களுக்கு தயக்கமில்லை என்பதை இவ்வாறு கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.