மத்திய அரசை ஆதரிப்பது ஏன்? ஓபிஎஸ் விளக்கம்!

அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பது கூட பெருமைதான் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் பிரச்சார பொதுக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெற்றது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அடுத்த வந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.


இறுதியாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றுகையில், “மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுத்து, அசைக்க முடியாத முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் அரசியல், நேற்று இன்று நாளை என எப்போதும் எம்ஜிஆரை சுற்றியே சுழலும். பல வேதனை, வேதனைகளை தாண்டி, அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா” என்றார்.


மத்திய பாஜக அரசில் நாம் அங்கம் வகிக்கவில்லை என்றாலும் கூட மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவந்துள்ளோம். கல்வி, உணவு உற்பத்தி, தொழில்துறை என பல்வேறு துறைகளில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக, 2023க்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறினார் பன்னீர்செல்வம்.


மேலும், எதையும் எதிர்பாராமல் உழைக்கும் தொண்டனின் உழைப்பு, சிந்திய ரத்தம் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. நமக்கு எந்த கெட்ட பெயரும் இல்லை. அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பது கூட பெருமைதான் என்றவர், தமிழகத்திற்கு நலத்திட்டங்கள் பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிக்கிறோம் என்று விளக்கம் அளித்தார்.

Exit mobile version