தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா? ஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவ் விளக்கம்!

ஸ்டாலினை சந்தித்தது தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு இல்லை என தினேஷ் குண்டுராவ் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திக்கப் போகிறார் என்றதும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன. அத்துடன், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பிரச்சினை நிலவுவது குறித்தும் பேசித்தீர்க்க இருப்பதாக சொல்லப்பட்டது.


இந்த நிலையில் ஸ்டாலினை தினேஷ் குண்டுராவ் இன்று மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அவருடன் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் இருந்தனர். ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களோடு அவர்கள் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.


பின்னர் வெளியே வந்த தினேஷ் குண்டுராவிடம், தொகுதிப் பங்கீடு பற்றி பேசினீர்களா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதனை மறுத்த தினேஷ், ஏர்கலப்பை பேரணிக்காக ராகுல் தமிழகம் வர இருப்பதாகவும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.


சட்டமன்றத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து ஸ்டாலினுடன் பேசவில்லை. கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தல் பிரச்சாரம் மற்றும் தமிழகத்தின் தற்போதைய கள நிலவரம் குறித்தும் பேசினோம் என்றும் அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அழகிரி, ராகுல் நிகழ்வைத் தவிர தேர்தலைப் பற்றியோ, தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு இடம் என்பதைப் பற்றியோ நாங்கள் பேசவில்லை. அதற்கான அவசியமும் தற்போது எழவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

Exit mobile version