மதுரை கப்பலூரியில் மழைக்கு சுங்கச்சாவடி பக்கம் ஒதுங்கிய தேமுதிகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் அஞ்சலி செலுத்த அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் மதுரை வந்தார். அவரை வரவேற்க திருமங்கலம் கப்பலூரிலுள்ள சுங்கச்சாவடியில் தேமுதிகவினர் நின்றிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால் நனையாமல் இருக்க சுங்கச் சாவடி கூரைகளின் கீழே ஒதுங்கினர்.
இதனால் வாகனங்கள் செல்ல இடமில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு வந்த காவல் துறையினர், தேமுதிகவினரை ஓரமாக நிற்குமாறு அறிவுறுத்தினர். இதனை முன்வைத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சாலை மறியல் செய்த தேமுதிகவினர் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை நகரப்போவதில்லை என அறிவித்தனர். இதனால் அப்பகுதியில் மேலும் போக்குவரத்து பாதிப்பானது. கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த பிறகே தேமுதிகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
read more:
வரவேற்பு அளிக்க உரிய அனுமதி பெற்றும் தேமுதிகவினரை காவல் துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.