சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தேமுதிக அறிவித்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலை அதிமுக கூட்டணியிலிருந்து சந்தித்த விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்கிறதே தவிர சட்டமன்றத் தேர்தல் குறித்து அந்த நேரத்தில்தான் முடிவு செய்வோம் என தொடர்ந்து கூறி வருகிறது.
தேனியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, இதுவரை அதிமுக கூட்டணியில்தான் தொடருவதாகவும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் பொதுக்குழு-செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தனது தொண்டர்களை மகிழ்விப்பதற்காகவே 234 தொகுதியிலும் தனித்து போட்டி என பிரேமலதா பேசியுள்ளார். அதே கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளதாக கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் டிசம்பர் 13ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் தேமுதிக தலைமைக் கழகம் கூறியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் கூட்டணி குறித்து முடிவெடுப்பது பற்றியும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கொரோனாவுக்குப் பிறகு முதல்முறையாக விஜயகாந்த் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.