ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக மா.செ திமுகவில் இணைந்தார்!

தேமுதிக மாவட்டச் செயலாளர் மதிவாணன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு தேமுதிகவின் செல்வாக்கு படிப்படியாக குறையத் துவங்கியது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாஜக, பாமகவை விட அதிகமாக 14 இடங்களில் போட்டியிட்டது தேமுதிக. ஆனால், 2019 தேர்தலில் இரண்டு கட்சிகளை விடவும் குறைவாக 4 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. அதிலும் தோல்வியைத் தழுவியது.


சில நாட்களுக்கு முன்பு சென்னையிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 41 தொகுதிகள் தருபவர்களுக்கே சீட் தரப்படும் என பிரேமலதா தெரிவித்ததாக தகவல்கள் வந்தன. இதனிடையே தேமுதிகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி வருகின்றனர்.

read more: லதா ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!


இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்த வடசென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் மதிவாணன், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக இவர் போட்டியிட்டார்.

தேமுதிக கட்சி விஜயகாந்த் கையில் இல்லாததே கட்சியை விட்டு வெளியேற காரணம் என மதிவாணன் கூறியுள்ளார். திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிவாணன், “ 41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என தேமுதிக சொல்வதிலிருந்து கட்சி நிலை தெரிகிறது. தேமுதிகவில் நடக்கும் எதுவும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு தெரியாது” என்றார்.

Exit mobile version