அனைத்துத் தொகுதிகளில் தேமுதிக போட்டியிடத் தயாராக இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலை அதிமுக கூட்டணியிலிருந்து எதிர்கொண்ட தேமுதிக, போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து வந்த மாநிலங்களவைத் தேர்தலில் ராஜ்யசபா சீட் வேண்டுமென அதிமுகவுக்கு வெளிப்படையாக கோரிக்கை வைத்தும் தரப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருந்து வருகிறது.
இதனை உறுதிசெய்யும் வகையில், வரும் தேர்தலில் தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி உருவாக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியிருந்தார். உடல்நலக் குறைவால் விஜயகாந்த் வீட்டிருந்தபடி ஓய்வெடுத்து வருவதால், பிரேமலதா விஜயகாந்த் தான் இப்போது கட்சிப் பணிகள் அனைத்தையும் முழுமையாக கவனிக்கிறார்.
இந்த நிலையில் தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராக இருக்கிறோம் என்றார். இந்த நிமிடம் வரையிலும் அதிமுக கூட்டணியில் தொடர்வதாகவும், வரும் ஜனவரி மாதம் நடைபெறும் செயற்குழு-பொதுக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமான முடிவை விஜயகாந்த் வெளியிடுவார் எனவும் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் முதலில் தேமுதிக முக்கியத் தலைவர்கள் அனைவரும் முதலில் பிரச்சாரம் மேற்கொள்வோம். விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தல் கிளைமாக்ஸின் போது பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் விவரித்தார் பிரேமலதா. வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வெற்றிபெறும் தொகுதிகளில் மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்வோம் என உறுதியளித்தார்.