தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா.
2 ஜி ஊழல் குறித்து திமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக முதல்வரை விவாதத்துக்கு அழைத்திருந்தார் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா. ஜெயலலிதாதான் சொத்துக் குவிப்பில் தண்டனை பெற்ற குற்றவாளி எனக் கூறி உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆ.ராசா விவாதத்திற்கு கூப்பிட்டால் நான் போகனுமா..? அவர் என்ன கட்சியின் தலைவரா? சாதாரண ஆள் அவர், எங்கள் கிளை செயலாளர் அந்தஸ்து கூட அவருக்கு கிடையாது என்று கூறினார். இந்த நிலையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக விமர்சித்ததாகக் கூறி அதிமுக சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 153 மற்றும் 505-(1)(பி) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்ட ஆ.ராசா, அண்மையில் 2-ஜி வழக்கு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதாரமற்ற தான்தோன்றித்தனமான அவதூறுகளை என் மீது சுமத்தினார். முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்றும், அவர் ஊழல் செய்து அடித்த கொள்ளை அரசியல் சட்டத்தின் மீது அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியைச் சிதைத்தது மட்டுமன்றி, ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக விளங்கும் அரசியல் சட்டத்தையே படுகொலை செய்த செயலாகும் என்றும் தெரிவித்தேன் என்று கூறினார்.
read more: மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு பயம்: எல்.முருகன்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி ஆதாரத்தோடு நான் பேசியதை, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153 மற்றும் 505-(1)(பி)-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் தமிழக காவல்துறை என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது என்ற ஆ.ராசா,
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் குறித்து நான் முதல்வருக்கு எழுதிய திறந்த மடலில் உள்ள எந்தக் கருத்தையும், வார்த்தையையும் பொய் என்றோ, புனைவு என்றோ மெய்ப்பிக்க வக்கற்ற முதல்வர், தமிழக காவல்துறை மூலம் கோழைத்தனமாக இவ்வழக்கை என் மீது தொடுத்துள்ளார் என்றும் சாடினார்.
தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள இவ்வழக்கின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமேயானால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கண்டனக் கருத்துகளை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்ற அடிப்படையில் இவ்வழக்கை வரவேற்று, முதல்வருக்கும், தமிழக காவல்துறைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் ஆ.ராசா.
மேலும், “இத்தகைய வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என்றோ, என் சட்டப்படியான வாதங்களைத் தடுக்கலாம் என்றோ, முதல்வர் நினைத்தால் அதைவிட அரசியல் அறியாமை ஏதும் இருக்க முடியாது. இப்போது ஊழலில் திளைக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை” எனவும் அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.