டேட்டா கார்டு தந்தாலும் முதல்வருக்கு டாட்டாதான்: ஸ்டாலின் பேச்சு

டேட்டா கார்டு தருவேன் என்று சொல்லும் முதல்வருக்கு டாட்டா காட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், பாரத் ராஜீவ்காந்தி நகர் பூங்கா மேம்படுத்தும் பணி, திருமலை நகர் பூங்கா மேம்படுத்தும் பணி, மகாவீர் நகர் பூங்கா மேம்படுத்தும் பணி, செந்தில் நகர் 10-வது தெருவில் உள்ள பூங்காவினை மேம்படுத்தும் பணி, வி.வி.நகர் விளையாட்டுத் திடல் மேம்படுத்தும் பணி, அஞ்சுகம் நகர் 4-வது தெருவில் உள்ள பூங்கா மேம்படுத்தும் பணி, வெங்கட் நகரில் கன்சர்வேன்சி இன்ஸ்பெக்டர் அலுவலகம் கட்டும் பணி போன்றவற்றிற்கு நேற்று அடிக்கல் நாட்டினார்.


பின்னர் கொளத்தூர் தொகுதி மக்களுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினார். அப்போது உரையாற்றிய ஸ்டாலின், நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ளது. நீட் தேர்விலிருந்து எந்த முறையில் விலக்குப் பெற வேண்டுமோ, அந்த விலக்கைப் பெறுவோம். அதற்காக எங்களது சக்தி முழுவதையும் பயன்படுத்துவோம் என உறுதியளித்தார்.


தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். தை பிறக்கப் போகிறது. வழி பிறக்கப் போகிறது என்ற ஸ்டாலின், தேர்தல் வருகின்ற காரணத்தால், முதல்வர் பழனிச்சாமி தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இப்போது டேட்டா கார்டு தரப் போவதாக சொல்லியிருக்கிறார். டேட்டா கார்டு, டேட்டா கார்டு என்று சொல்லும் அவருக்கு டாட்டா காட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

read more: ரசம் வைத்து குடித்தால் கொரோனா சரியாகிவிடும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதனை நீங்கள் புரிந்துகொண்டாலே போதும். திமுகவைப் பொறுத்தவரையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காகப் பணியாற்றுகின்ற இயக்கம். ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு பணிகளைச் செய்கிறோம் என்றால், ஆட்சியில் இருந்தால் எவ்வளவுப் பணிகளைச் செய்வோம் என்று எண்ணிப் பாருங்கள் என்று ஸ்டாலின் உரையாற்றினார்.

Exit mobile version