முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்த ஒரே விவசாயம் பண விவசாயம் மட்டும்தான் என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை திமுக ஆரம்பித்துவிட்டது. விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக முக்கிய நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்கள். கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் தனது நேரடி பிரச்சாரத்தை காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் நேற்று தொடங்கினார்.
அதன்பிறகு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த தமிழகத்தை மீட்போம் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், “திடீரென்று சிறுபான்மையினர் மீது அதிமுகவுக்கு பாசம் வந்துள்ளது. சிறுபான்மையினர் அச்சப்படத் தேவையில்லை, அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
தேர்தல் வர இருப்பதால் சிறுபான்மையின மக்களை ஏமாற்றத் திட்டமிட்டுள்ளார்கள். முத்தலாக் சட்டமா? ஆதரிக்கிறோம். காஷ்மீருக்குச் சிறப்புரிமை ரத்தா? ஆதரிக்கிறோம்! குடியுரிமைத் திருத்தச் சட்டமா? ஆதரிக்கிறோம். என்று எல்லாவற்றுக்கும் தலையாட்டிய பழனிசாமிக்கு இப்போது சிறுபான்மையினரைப் பற்றிப் பேச அருகதை உண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.
கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார் பழனிசாமி. இதுவரைக்கும் மத்திய அரசின் ஜனநாயக விரோதச் செயல்களை எதிர்த்துள்ளீர்களா? எதை எதிர்த்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர், எல்லாவற்றுக்கும் தலையாட்டிய பிறகு, ஆட்சி முடியப் போகும் நிலையில் கொள்கை வேறு கூட்டணி வேறு என்று பாடம் எடுக்கிறீர்கள் என்றார்.
மேலும், “வேளாண் சட்டத்தை இந்தியா முழுவதும் இருக்கிற அனைத்து விவசாயிகளும் எதிர்க்கிறார்கள். ஒரே ஒரு விவசாயி மட்டும் தான் ஆதரிக்கிறார். அவர் பெயர் எடப்பாடி பழனிசாமி. நானும் விவசாயி, நானும் விவசாயி என்று தினமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அவருக்குத் தெரிந்த ஒரே விவசாயம், பண விவசாயம் தான். ஊழல் விவசாயம் தான்” என்ற ஸ்டாலின்,
read more: எம்.ஜி.ஆர் நல்லாட்சி தரவில்லையா? சீமானுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!
அவர் மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் தமிழக ஆளுநரிடம் ஊழல் பட்டியலைக் கொடுத்துள்ளோம். இது கூட முழுமையான பட்டியல் அல்ல. முதல் பட்டியல்தான். அடுத்தடுத்து பல்வேறு பட்டியல் வெளிவர இருக்கிறது. இந்த முதல் பட்டியலைப் பார்த்தே நடுங்க ஆரம்பித்துள்ளார் பழனிசாமி. எனது ஆட்சியில் எந்த டெண்டரிலும் முறைகேடு இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும். அதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படி அவரால் சொல்ல முடியவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.