மக்கள் வரிப்பணத்தில் அதிமுக விளம்பரம்: தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த திமுக!

மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளம்பரம் செய்வதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இதனிடையே வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் அரசின் சாதனைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தி விளம்பரங்கள் ஒளிபரப்பப் படுகின்றன.


இந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹுவை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பழனிசாமியை முன்னிலைப்படுத்தி தொலைக்காட்சிகளிலும் – பத்திரிகைகளிலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கும் அதிமுகவின் மீதும் அதற்கு துணை போகும் தமிழக அரசு அலுவலர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி அளித்த மனுவில், மக்களின் வரிப்பணத்தை பொது நோக்கத்திற்காகத் தான் செயல்பட வேண்டுமே தவிர, தனிநபர்க்காகவோ, ஆளும் அரசியல் கட்சிக்காகவோ செலவிடக்கூடாது. மக்கள் நலனுக்காக மட்டும் தான் அந்த பணம் செலவிடப்பட வேண்டுமென சுட்டிக்காட்டினார்.

read more: தேர்தல் வியூகம்: ஏ,பி,சி என சட்டமன்ற தொகுதிகளை பிரித்த பாஜக!


மேலும் இதுவரை தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான செலவுத் தொகை குறித்த முழு விபரத்தையும் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு; அதுகுறித்து விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Exit mobile version