நீட் தேர்வை கொண்டுவந்த தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகளே 13 பேரின் தற்கொலைக்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், நீட் தேர்வுக்கு காரணம் யார் என்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டசபையில் நீட் தேர்வு காரணமாக கடந்த வாரம் மட்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை நீட் தேர்விற்கு ஆதரவாக காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் வாதாடினார் என்று கூறினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையை விட்டு வெளியேறினர். மேலும், இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதிலளித்து பேசியதாவது:-
நீட் தேர்வுக்கு காரணம் தி.மு.க. – காங்கிரஸ் என்பது தவறான தகவல் கிடையாது, உண்மையான தகவல். இந்த திட்டம் கொண்டு வந்தபோது காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததா, இல்லையா, மறுக்க முடியுமா? எதிர்க்கட்சி துணைத் தலைவர் சொல்லுங்கள், யாருடைய ஆட்சியில் நீட் வந்தது? நீட் தேர்வு எப்பொழுது வந்தது? நீட் தேர்வை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று இந்த நாட்டிற்கே தெரியும், யாருக்கும் தெரியாதது கிடையாது. 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பைப் பெற்றது அ.தி.மு.க. மறுக்க முடியுமா? அப்பொழுது அந்த தீர்ப்பை எதிர்த்து யார் வாதாடினார்கள்?.
இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறீர்களே, இத்தனை பேர் வாதாடுவதற்கு காரணம் என்ன? காரண கர்த்தா யார்? இவ்வளவு பேருக்கு பிரச்சனை வந்ததற்கு யார் காரணம்? நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டு வருவதற்கு யார் காரணம்? நாங்கள் அல்ல. நீங்கள் கூட்டணியில் வைத்திருக்கிறீர்களே, இப்பொழுது வெளிநடப்பு செய்தார்களே, அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி, வெளியில் வந்து முற்றுப்புள்ளி வைத்தேன் என்று சொன்னார்கள். நீங்கள் கூட்டணியில் இடம்பெற்று 2010-ஆம் ஆண்டில் நீட் தேர்வை கொண்டு வந்தது தான் 13 பேர் மரணத்திற்குக் காரணம். தி.மு.க. துணை போனது, யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள், என முதலமைச்சர் பேசினார்.