துணைவேந்தர்களின் பதவி: ஆளுநருக்கு திமுக எதிர்ப்பு!

பாரதிதாசன், பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர்களின் பதவிக் காலத்தை நீட்டித்த ஆளுநரின் உத்தரவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.


இருவரின் பதவிக்காலமும் நிறைவுற்று- பிரிவு உபச்சார விழாவும் நடத்தப்பட்டு- பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது ஆரோக்கியமான செயலன்று என்பது மட்டுமல்ல- அவசியமற்றதுமாகும். வெளிப்படையான தேர்வு முறைக்கு “விடை” கொடுக்கும் மிக மோசமான செயலாகும் என்று இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது திமுக.


திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி வெளியிட்ட அறிக்கையில், புதிய துணைவேந்தர்களைத் தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்ட பிறகு- துணைவேந்தர்களுக்கு ஏன் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்? அதிமுக அரசின் சார்பில் அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டதா? தமிழக ஆளுநர் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்தாரா? எனக் கேள்வி எழுப்பினார்.


உயர்கல்வித் துறையை எந்த அளவிற்குச் சீரழிக்க முடியுமோ அந்த அளவிற்கு அதிமுக அரசு சீரழிப்பதும்- அதை ஆளுநர் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் அவர் வகிக்கும் வேந்தர் பொறுப்பிற்கு ஏற்றதல்ல என சுட்டிக்காட்டிய பொன்முடி, பணி நீட்டிப்பு” வழங்கிய துணைவேந்தர்களை வைத்துக்கொண்டு- உயர்கல்வியின் தரத்தை எப்படி உயர்த்த முடியும்” என்று ஆளுநருக்கு கேள்வியை முன்வைத்தார்.

read more: ரஜினிகாந்தின் ஆதரவு பாஜகவுக்குத்தான்: அடித்துச் சொல்லும் எல்.முருகன்


இது உயர் கல்வியின் தரத்தைத் தாழ்த்தி- தமிழக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தினை வீழ்ச்சிப் பாதையில் தள்ளும் என்று தெரிந்தே வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வேதனையளிப்பதாகவும், துணைவேந்தர்களின் பணி நீட்டிப்பு உத்தரவினை வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் திரும்பப் பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட வேறு எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கும் முயற்சியில் வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் ஈடுபட வேண்டாம் என்றும் பொன்முடி வலியுறுத்தினார்.

Exit mobile version