திமுக மா.செ.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக கடந்த நவம்பர் மாதமே துவங்கிவிட்டது. முதலாவதாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறது.


அதன்பிறகு விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்து மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். கொரோனா காலத்தில் இணைய வழி உரையாடல்களை அதிகம் மேற்கொண்டது திமுகதான். தமிழகத்தை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் ஸ்டாலின் காணொலி வழியிலாகவே முன்னெடுத்தார். ஸ்டாலின் கிராம சபைக் கூட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார்.


இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி வியாழக் கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதில் விவாதிக்கப்படவுள்ளது.

read more: கமல்ஹாசனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை!


பொங்கல் விடுமுறை முடிந்துவிட்ட நிலையில், விரைவில் ஸ்டாலின் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இந்த ஆலோசனை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version