திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்புரை இயக்கத்தை ஜூலை ஒன்றாம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுவரை 1.35 கோடி பேர் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மூலம் இணைந்துள்ள நிலையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை அடுத்த கட்டமாக எடுத்துச் செல்வது, திமுக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது மற்றும் தேர்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
