கிரண்பேடியை பதவியில் இருந்து நீக்கியது பா.ஜ.க.வின் கபட நாடகம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

கிரண்பேடியை இவ்வளவு காலம் பதவியில் வைத்திருந்து தற்போது பதவியில் இருந்து நீக்கியது பா.ஜ.க.வின் கபட நாடகம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை :

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தான் காரணம் என்று கருத்து பரவிய நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்படவிடாமல் தடுத்து, ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி,அம்மாநில மக்களுக்கான நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவிடாமல் முடக்கி வைத்தவர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.

Read more – தமிழகத்தில் பிளஸ்- 2 பொதுத்தேர்வுக்கான தேதி வெளியீடு : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதலமைச்சராகச் செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்ட பா.ஜ.க. அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம்.

புதுச்சேரி மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை இது. இறுதிக் கட்ட முயற்சி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து பா.ஜ.க. செய்த தரம் தாழ்ந்த அரசியலையும், அம்மாநிலத்தின் முன்னேற்றத்தை பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்” என்று அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version