தான் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் இருந்து திரும்பிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, ஆர்த்தோ அன்ட் நியூரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்டாலினுக்கு ரத்த அழுத்தம் மற்றும் இசிஜி ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், ஸ்டாலினுக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 10 நிமிடம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லுமாறு ஸ்டாலினுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நிவாரணப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொன்ன ஸ்டாலின் எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. இதனால் இரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் 10 நிமிடம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லச் சொன்னார்கள். அதனால் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் திரும்பினேன். மற்றபடி ஏதும் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார். ஸ்டாலின் மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.